ராமநாதபுரம் முளைத்த பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் கடலாடி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட கோரி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் முளைத்த நெல் மணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்களை கொட்டி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் பேய்க்குளம், சிக்கல், சிறைக்குளம், பி.கீரந்தை, கொத்தங்குளம், தனிச்சியம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் இந்தாண்டு 15000 ஹெக்டேரில் சம்பா பருவ சாகுபடி செய்தனர். இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக சம்பா விவசாயம் பாதிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் விவசாயிகள் இரண்டாவது முறையாக சம்பா சாகுபடி தொடங்கினர். இதையடுத்து வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளுக்கு நெல்மணிகள் நன்றாக முளைத்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிர்கள் வயலில் சாய்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கியது. இதனால் கடன் வாங்கிசெலவு செய்த விவசாயிகள் செய்வது அறியா பரிதவிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.25000 மழை வெள்ள நிவாரண நிதியும், பாரதபிரதமரின் தேசிய வேளாண்காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுமையான தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் கூட்டுறவு வாங்கிகளில் வாங்கிய பயிர்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேதமடைந்த நெல் பயிர்களை கொண்டு வந்து கீழே கொட்டி ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். அழுகிய பயிர்களை கண்டு பெண்கள் கண்ணீர் விட்டு கதறி ஒப்பாரி வைத்து அழுதது அனைவரையும் வேதனை அடையச் செய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story








