வாட்ஸாப்பில் வைரலாகும் வாழ்த்து செய்தி! யார்? அந்த அமைச்சர்!அப்படி என்ன செய்தார்?

X
அரியலூர், ஜன.27- இணையத்தில் இந்த காட்சியை யதேச்சையாக காண நேரிட்டது. இதிலிருப்பவர் நம் தமிழ்நாட்டின் அமைச்சர்களுள் ஒருவர். தனது துறைசார்ந்து, கட்சி சார்ந்து, சொந்த காரணங்கள் என தினம் பல முக்கிய அலுவல்கள் இவருக்கு உண்டு. தலைமைச் செயலகம் தொடங்கி கட்சி அலுவலகம், முகாம் அலுவலகம், சொந்த ஊரில் சுக-துக்க நிகழ்வுகள் என செல்லுமிடங்களில் எல்லாம் இவரைக் காண்பதற்காக பலர் காத்து நிற்க, அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு கடந்த வாரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளை நோக்கி நேரத்திற்கு உணவு, ஓய்வின்றி பயணித்து கொண்டிருக்கிறார் இந்த அமைச்சர். காலையில் பள்ளி தொடங்கும் வேளையில் உள் நுழைபவர், மாலையில் பள்ளி முடியும் நேரம் வரை ஒவ்வொரு அரசுப் பள்ளியாக மாணவர்களைத் தேடி விரைகிறார். ஒரு அமைச்சர் ஏன் மாவட்டத்திலுள்ள அத்தனை அரசுப் பள்ளிகளுக்கும் செல்ல வேண்டும்? காரணம் தெரிந்தால் பலரும் ஆச்சரியப்படுவீர்கள், மனதார பாராட்டவும் செய்வீர்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் எளிய பின்னணியில் இருந்து வந்திருப்பர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள். தனியார் பள்ளி மாணவர்களின் கல்வியறிவோடு, அரசுப்பள்ளி மாணவர்கள் எவ்விதத்திலும் சளைத்து நின்றுவிடக் கூடாது என்ற நோக்கில் ஒரு பொறுப்புமிக்க ஆசிரியராக மாறியிருக்கிறார் இந்த அமைச்சர். யார் இந்த அமைச்சர்? அப்படி என்ன செய்தார்? இன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் தான் இவர்! அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறவும், அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும் தம்மால் எப்படி உதவிட இயலும் என சிந்தித்தவர் ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணுகிறார். அதற்காக, நன்கு அனுபவமிக்க கல்வியாளர்களை நாடி 10, 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவச் செல்வங்களுக்காக 'தேர்வை வெல்வோம்' எனும் வினா-விடை வங்கி தொகுப்பு புத்தகங்களை தயாரிக்கச் செய்கிறார். அதற்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொள்கிறார்.இது ஏதோ குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் அல்ல. அவர் சார்ந்த அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் முழுமைக்கும் என்பதை மனதில் கொள்க. அப்புத்தக தொகுப்பை வழங்க அமைச்சரே நேரடியாக செல்கிறார். மாணவச் செல்வங்களிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கிறார். அவர்களை ஊக்கப்படுத்தி மகிழ்கிறார். நிற்க... அமைச்சர் என்றாலே படை பரிவாரங்களுடன் அணிவகுத்து வந்து நிற்பதை பார்த்த பலருக்கும், ஆராவாரமின்றி மிக எளிமையாக மாணவச் செல்வங்களுடன் உணர்வுப் பூர்வமாக இவர் கலந்துரையாடும் காட்சிகளை பார்க்கும் போதே மனதில் மகிழ்ச்சிப் பூ பூக்கிறது.இச்சமூகத்தில் ஒரு பொதுப்புத்தி நீண்ட காலமாகவே கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதுவும், திரைத்துறையால் திட்டமிட்டே கட்டமைக்கப்பட்டிருகிறது. அரசியல்வாதிகள் என்றாலே தவறானவர்கள், அதிலும் ஆளும் கட்சியின் அமைச்சரை அடாவடிப் பேர்வழி போன்ற காட்சி சித்தரிப்புகளை திரையில் கண்டு பழக்கப்பட்ட நமக்கு, திரு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் இந்த காட்சிகள் சமூகத்தின் மீது நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறது. தம் பகுதி மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என செயலாற்றும் திரு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் செயல்பாடுகளை, எந்த இயக்குநரும் திரையில் காட்சிப்படுத்த மாட்டர். இவரைப்போன்ற மனிதர்கள் அரசியலிலும், சமூகத்திலும் தொடர்ந்து செயல்படுவது எளியவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கை உணர்வூட்டும். வாழ்த்துகள், மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு...
Next Story

