தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இலக்கியக் கூட்டம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன

X
தமிழ் வளர்ச்சித்துறையின் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, ” தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின் பிறந்தநாளன்று உள்ளுர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இவ்வறிவிப்பின்படி, 2024-25ஆம் ஆண்டில் திரு. மேலாண்மை பொன்னுசாமி, தீபம் நா. பார்த்தசாரதி, திரு. கி. இராஜநாராயணன், திரு. கு. அழகிரிசாமி ஆகிய இலக்கிய ஆளுமைகளின் இலக்கியப் பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 13.02.2025 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கலைக் கல்லூரியில் இலக்கியக் கூட்டம் நடத்தப்பெற உள்ளது. முன்னதாக இவ்விலக்கிய ஆளுமைகள் குறித்து 06.02.2025 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. பள்ளிப் போட்டி காலையில் 09.30 மணி அளவிலும் , கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.00 மணி அளவிலும் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடத்தப்பெறவுள்ளன. போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும். மாவட்ட அளவில் பள்ளி / கல்லூரிப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/-, என்ற வகையில் வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 13.02.2025 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள இலக்கியக்கூட்டத்தில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story

