அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
X
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் தடய அறவியல் துறை உதவி இயக்குநர் தவிர்த்து மற்றவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-15 -ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது. இந்த வழக்கில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அவரது தரப்பில், ‘‘இந்த வழக்கு தொடர்பான பென்-டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகல்களை தங்களுக்கு வழங்கக் கோரி சிறப்பு நீதிமனறத்தில் கோரியுள்ளோம். அதுவரை தடய அறிவியல் துறை உதவி இயக்குநரான மணிவண்ணனிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தக் கூடாது" எனக் கோரப்பட்டது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், சம்பந்தப்பட்ட தடய அறிவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்துவிட்டு, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்றார். அதற்கு அனுமதியளித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், வழக்கு விசாரணையை வரும் பிப்.6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Next Story