சென்னை: ஓடும் பேருந்தில் முன்னாள் டிஎஸ்பி மர்ம மரணம்

X

முன்னாள் டிஎஸ்பி ஒருவர் ஓடும் பேருந்தில் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், மேல கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (65). திருவாரூர் பகுதியில் டிஎஸ்பியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் நேற்று கூடலூரிலிருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த நிலையில் பேருந்திலிருந்து இறங்காமல், இருக்கையில் சாய்ந்த நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து, ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மகேந்திரன் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மகேந்திரனுக்கு ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததும், இதனால் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோதுதான் இறந்திருப்பதும் தெரியவந்தது. இருப்பினும் அவர் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் கோயம்பேடு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story