நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த நகராட்சி அதிகாரிகள் அறநிலையத் துறை எதிர்ப்பால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த நகராட்சி அதிகாரிகள் அறநிலையத் துறை எதிர்ப்பால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அகற்ற வந்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் எதிர்ப்பால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியில் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடை நகராட்சி சார்பில் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. அந்த இடம் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமானது எனக்கூறி அறநிலையத்துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடையை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க கடந்த 2003-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நகராட்சி ஆணையர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி கடையை காலி செய்து, டிசம்பர் 31-ம் தேதிக்குள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நகராட்சிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மதியம் 5 மணி அளவில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடையை இடித்தனர். அப்போது கடையை இடிப்பதற்கு அறநிலையத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, இப் பிரச்சனையை நீதிமன்றத்தில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தியதை அடுத்து கடையை இடிக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு நகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
Next Story

