விருத்தாசலத்தில் சுடுகாட்டில் மண்ணைத் தோண்டி எடுக்கும் அவலம்

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி விருத்தாம்பிகை நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இருப்பவர்களின் பிரேதங்களை அப்பகுதியில் உள்ள மணிமுத்தாற்றங்கரையில் அக்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம். ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாத காலங்களில் ஆற்றிலும், தண்ணீர் வரத்து வரும்போது கரைப்பகுதிகளிலும் அடக்கம் செய்வார்கள். அதிகளவு மழை வெள்ளம் வரும்போது காந்தி நகர் மின் மயானத்தில் அடக்கம் செய்வார்கள். இந்நிலையில் சமீப காலங்களாக ஆற்றை ஒட்டி உள்ள சுடுகாடு பகுதிகளில் கரையில் உள்ள மண்ணை வெட்டி எடுத்துச் செல்வதால் பிரேதங்கள் வெளியில் தெரிவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இது குறித்து வருவாய்த் துறையினரும் நகராட்சி நிர்வாகத்தினரும் கண்டு கொள்ளவில்லை. இப்பகுதி சுடுகாட்டின் அருகே உள்ள கரை பகுதிகளை வெட்டி எடுத்து செங்கல் தயாரிக்க மண்ணை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு மண்ணை வெட்டி எடுக்கும் போது சடலங்கள் வெளியில் தெரிகின்றன. மேலும் மனித எலும்பு கூடுகளும் அவ்வப்போது தென்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் மண் தோண்டி எடுக்கப்பட்டதால் அதில் வந்த ஒரு எலும்புக்கூடை மீண்டும் மூடாமல் திறந்தவெளியில் அப்படியே போட்டுள்ளனர். மேலும் கை எலும்பு ஒன்றை முட் புதறிலும் தூக்கி வீசி உள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இந்த எலும்புகளை நாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று எலும்புகளை கவ்விக்கொண்டு ஊர் பகுதியில் கொண்டு வந்து போட்டு விட்டு சென்று விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் ஆங்காங்கே இதுபோன்று எலும்புக்கூடுகள் முட்புதர்களிலும் திறந்தவெளிகளிலும் ஆற்றிலும் கிடைக்கின்றன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி அவற்றை முறையாக புதைப்பதுடன், சுடுகாட்டு பகுதியில் மண்ணைத் தோண்டி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

