ஜாதி சான்றிதழ் தர வேண்டுமென மூன்றாவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகள்
பள்ளிக்கு செல்லாமல் 20 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் ஊருக்குள் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் தரவேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...... நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்து ஏக்குணி என்னும் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மலை வேடன் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் பரம்பரை பரம்பரையாக நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர் என கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த 1995க்கு பிறகு இவர்களுக்கு மலைவேடன் ஜாதி சான்றிதழ் அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கூறி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் செய்த பெற்றோர்கள் சென்னை வரை சென்று சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது நாள் வரை தங்களுக்கு ஜாதி சான்றிதழும் வழங்கவில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஊருக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோர்கள் மட்டுமல்லாமல் சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் தாங்கள் படித்தும் எந்தவிதமான உபயோகம் இல்லாததால் இதற்கு மேல் பள்ளிக்கு வர தயாராக இல்லை எனக் கூறி தாங்கள் படிக்கும் பள்ளிகளில் கடிதத்தை கொடுத்து மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டுமென பள்ளிக்கு சென்று கடிதம் அளித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிச் சீருடையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதை அறிந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பேச்சுவார்த்தையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பள்ளிக்கு செல்லாமல் பள்ளி மாணவ மாணவிகள் ஊருக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






