கந்து வட்டி கொடுமையால் பூ வியாபாரி தற்கொலை
![கந்து வட்டி கொடுமையால் பூ வியாபாரி தற்கொலை கந்து வட்டி கொடுமையால் பூ வியாபாரி தற்கொலை](https://king24x7.com/h-upload/2025/01/30/787591-1000089172_1738209873736_1738875403154_1739036918653_1739604043211.webp)
X
![Madurai King 24x7 Madurai King 24x7](/images/authorplaceholder.jpg)
மதுரை உசிலம்பட்டி அருகே கந்து வட்டி கொடுமையால் பூ வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள ரெட்டியபட்டியைச் சேர்ந்த பரமன் (55) என்பவர் தனது தோட்டத்தில் பூக்கள் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி மின்னல் கொடி. இந்தத் தம்பதியருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந் நிலையில், பரமன் மகன் தெய்வேந்திரன், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மலர்ச் சந்தையில் கடை நடத்தி வரும் பாண்டியராஜன், பாலமுருகன் ஆகியோரிடம் ரூ. 4 லட்சம் கடனாக வாங்கினார். இதற்கு அவர்கள் 10 சதவீத வட்டியும் வசூலித்ததாக தெரிகிறது. இந் நிலையில், கடன் ரூ.4 லட்சத்துக்கு வட்டி சேர்த்து ரூ.17 லட்சம் ஆனதாகவும், அதற்கு ஈடாக பரமனின் நிலத்தை தங்கள் பெயருக்கு பதிவு செய்து தர வேண்டும் என்று பாண்டியராஜன் தரப்பினர் கேட்டுள்ளனர். இதற்கு பரமன் மறுப்புத் தெரிவித்தார். இதனால், பாண்டியராஜன், பாலமுருகன் உல்ளிட்டோர் பரமன் வீட்டுக்குச் சென்று பரமன், அவரது மனைவி, குடும்பத்தினரை அவதூறாகப் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பரமன் நேற்று (ஜன.29) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்து விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பரமனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரர்களை கைது செய்தால் தான் உடலை பெற்று செல்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் உயரதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் உடலை பெற்று சென்றனர்.
Next Story