பேரூராட்சி அறிவிப்பு

பேரூராட்சி அறிவிப்பு
X
சென்னிமலை பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என சென்னிமலை பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் ஏராளமான விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் அனுமதி இன்றி வைக்கப்பட்ட இந்த பிளக்ஸ் பேனர்கள் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இருப்பதுடன் சில சமயங்களில் கீழே முறிந்து விழும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த தைப்பூசத்தின் போது சென்னிமலை பேரூராட்சி பகுதியில் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தது. இதனை அகற்றக்கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த முகிலன் பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து உடனடியாக பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வருகிற 3-ந் தேதி சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் சென்னிமலைக்கு வருவார்கள் என்பதால் சாலை ஓரங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னிமலை பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் கூறுகையில், சென்னிமலை பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும். அப்படி அகற்றாத பட்சத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்படும் என தெரிவித்தார். அதேபோல் சென்னிமலை பகுதியில் உள்ள மின் கம்பங்களிலும் பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டுள்ளது. இவற்றையும் உடனடியாக அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -----
Next Story