அடிப்படை வசதியில் ஒன்றாகி போன மதுபானக் கடை: அடிப்படை வசதியுடன் மதுபானக்கடை கேட்டு கடையடைப்பு, போராட்டம் நடத்திய பொதுமக்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் கோரியும் மற்றும் மதுபானக்கடையை திறக்க வலியுறுத்திம், வார்த்தகர்கள் கடையடைப்பு செய்தனர். மேலும், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். பேராவூரணி - ராமேஸ்வரம் பெருமகளூர் வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை மீண்டும் பெருமகளூர் வழித்தடத்தில் இயக்க வேண்டும். அரசு டவுன் பஸ் தடம் எண். 15 ஐ மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வர்த்தக சங்கத்தினர், பெண்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தனி சிறப்பாக, மதுபானக்கடை அவசியம் அமைக்க வேண்டும், மதுபானக்கடை அகற்றியதால், வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, பெண்கள் வலியுறுத்தி கோஷமிட்ட, சம்பவம் அவ்வழியாக சென்ற பலரும் ஆச்சரியமடைந்தனர். இது குறித்து பிரேமா நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கடைத்தெருவில் டாஸ்மாக் கடை இருந்தது. இதனால், 145 ரூபாயுடன் முடிந்து விட்டது. தற்போது, பிளாக்கில் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை இல்லாத சூழலில், எங்கள் பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ., துாரம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பாடி பகுதிக்கு சென்று மது அருந்தி விட்டு, வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது. மதுபானக்கடை இல்லாததால் கடைவீதியில் பெரிய அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுபானக்கடை அவசியம் வேண்டும். அடிப்படை வசதிகளுடன், மதுபானக்கடை என்ற கோரிக்கைகளை அரசு தரப்பில் நிறைவேற்றாவிட்டால், சாலை மறியல், தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து பக்கிரிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 1968 ம் ஆண்டில், பேரூராட்சியாக எங்கள் ஊர் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது வரை சிறப்பு அல்லது தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தவில்லை. எங்கள் ஊரில் 1982ல் இருந்த பத்திரவுப்பதிவு அலுவலகத்தை மூடி விட்டனர். தீயணைப்பு நிலையம் இல்லை. எந்த அடிப்படை வசதியும் இல்லை. மேலும், மதுவை இப்போது எல்லோரும் குடிக்க துவங்கி விட்டனர். எங்கள் பகுதியில் மதுபான கடை இல்லாத சூழலில், உடல்நலத்திற்கு பாதிப்பு என்றாலும், மது அருந்த பக்கத்து மாவட்டத்திற்கு சென்று, குடித்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும் போது விபத்துகளை சந்திக்கின்றனர். இதனால், அவர்கள் மட்டுமின்றி, பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்கிறது. உள்ளூரில் மதுகடை இருந்தால் குடித்து விட்டு வந்து வீட்டிற்கு சென்று விடுவார்கள் எனவே அரசு அடிப்படை வசதியுடன் மதுபானக்கடை என்ற கோரிக்கையும் அரசு நிறைவேற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
Next Story




