பெண் காயம்

பெண் காயம்
X
பவானிசாகர் அருகே ஒற்றை யானை தாக்கியதில் பெண் படுகாயம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரம் வருவதும், வாகனங்களை வழிமறித்து உணவு உள்ளதா என்று பார்ப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியை ஒட்டியுள்ள பூதிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மாரம்மாள் (60). நேற்று மதியம் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு தெங்குமரஹடா செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார். பூதிக்குப்பம் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கி கிராம மக்களுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை திடீரென அவர்களை துரத்தியது. யானை வந்ததால் அச்சமடைந்த மாரம்மாள் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஆளுக்கு ஒரு திசையாக ஓட்டம் பிடித்தனர். ஆனால் மாரம்மாளை யானை துரத்தி தும்பிக்கையால் தாக்கியது. இதில் அவரது இடது கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. யானை தாக்கியதால் காயமடைந்த மாரம்மாளை உடன் வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.யானை தாக்கியதில் மூதாட்டி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக இந்த ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி எங்கள் கிராமம் அருகே சுற்றி வருகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டியை யானை தாக்கியுள்ளது. நல்ல வாய்ப்பாக அவர் காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இருந்தாலும் எங்கள் பகுதி மக்கள் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். உடனடியாக வனத்துறையினர் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றனர்.
Next Story