கோவை: பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது !

X
டாடாபாத் பகுதியைச் சேர்ந்த 53 வயதான கட்டிட தொழிலாளிக்கு கல்லூரி படிப்பை முடித்து 22 வயது மகள் உள்ளார். அவர்கள் வசிக்கும் வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்திரசேகர் என்பவர் அந்த பணிகளை செய்ய வந்தார். அப்போது சந்திரசேகரனுக்கும், அந்த பெண்ணின் தந்தைக்கும் நட்பு ஏற்பட்டது. இதனால் சந்திரசேகரன் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 22 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. சந்திரசேகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை தனக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சந்திரசேகரன் அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். உடனே அந்த பெண்ணின் சகோதரர் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் ரத்தினபுரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீட்டிற்கு அத்துமீறி புகுந்து மிரட்டிய சந்திரசேகரை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

