காவிரி டெல்டாவில் தான் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகம்: துணைவேந்தர்

காவிரி டெல்டாவில் தான் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகம்: துணைவேந்தர்
X
தமிழ் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சிற்பத் துறை சார்பில், தமிழ்நாடு அரசுத் திட்டமான தமிழ் மண்ணில் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் திட்டத்தின் கீழ் மரப்பாச்சிப் பொம்மை, தஞ்சாவூர் ஓவியம் தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு மாத காலப் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) சங்கர் பேசியது: தஞ்சாவூர் பெரியகோயிலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் ஏறக்குறைய 70 கி.மீ. தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கற்களின் சராசரி வயது 4.5 மில்லியன் ஆண்டுகள். இவ்வளவு பழைமையான பாறைகள் அரிமானம் இல்லாமல் இருப்பதற்கு அகனுடைய எதிர்ப்புத் திறனே காரணம். இதனால்தான், தஞ்சாவூர் பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருக்கிறது. காவிரி டெல்டாவில் 100-1000 அடிக்கு மேலே இடைப்பட்ட பகுதியில் ஆற்று மணல் படிந்துள்ளது. இதனால்தான், இப்பகுதியை டெல்டா என அழைக்கிறோம். ஏறத்தாழ 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி நதியால் உருவானது என்பதால், கடற்கரையில் இருப்பது போன்று இப்பகுதியிலும் ஆற்று மணல் பரவி இருந்தது. காலப்போக்கில் ஆற்று மணல் கீழே இறங்கி உள்வாங்கி, கிட்டத்தட்ட 10 மாவட்டங்ககள் உருவாகியுள்ளன. இந்த ஆற்று மணலில் சிலிக்கான் ஆக்சைடு கலந்திருப்பதால், அது வெள்ளையாக இருக்கிறது. இந்த மண்ணில் தண்ணீர் வந்தால் தேங்காமல், அப்படியே கீழே இறங்கிவிடுவதால் சுத்தமாக இருக்கிறது. இப்பகுதியில் 150 அடிக்கு கீழே ஆற்று நீரோட்டம் இருப்பதால், நீர் ஆதாரம் பெருகி இருக்கிறது. இங்கு தண்ணீர் அதிகமாக தேங்கக்கூடிய இடமாக உள்ளது. இதனால் ஒரு ஆழ்துளை குழாய் மூலம் 20 ஏக்கரில் நெல் வாழை, சுரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்ய முடிகிறது. இது தஞ்சாவூர் டெல்டாவில் மட்டும்தான் முடியும் வேறு எங்கும் முடியாது. இதுபோல, தஞ்சாவூரில் பலபெருமைகள் உள்ளன" என்றார் சங்கர். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், கலைப்புல முதன்மையர் பெ.இளையாப்பிள்ளை, தமிழ்நாடு அரசுத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வீ.செல்வக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் இரா.காமராசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக சிற்பத் துறைத்தலைவர் வே.லதா வரவேற்றார். திட்ட உதவியாளர் அ.சிவஞானராஜா நன்றி கூறினார்.
Next Story