நெகிழி கழிவு சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்டம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்திய தேசிய மாணவர் படை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார் பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பெரம்பலூர் நகராட்சி சார்பில் நடைபெற்ற நெகிழி கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று (01.02.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் தேசிய மாணவர் படை மாணவர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை (பிளாஸ்டிக்) ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழ்நாடு அரசு பல்வேறு பிரச்சாரங்களை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக தமிழகம் முழுவதும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் நிகழ்வினை 2025 ஆம் ஆண்டு முழுவதும் மாதங்களின் இறுதி சனிக்கிழமைகளில் நடைமுறைப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் பெரம்பலூர் நகராட்சி இணைந்து நடத்திய தேசிய மாணவர் படை, தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு இயக்க பேரணி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது நகரின் முக்கிய சாலை வழிகளில் சென்று துறையூர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் தன்னார்வலர்கள் பங்கேற்று, நெகிழி பயன்படுத்துவதற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் தெப்பக்குளத்தில் தன்னார்வலர்கள் பொதுமக்கள் மற்றும் நகராட்சி தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் மூலமாக நெகிழி கழிவு சேகரித்து, சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக இப்பேரணி நிகழ்வில் கலந்துகொண்ட உணவக உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தின் பிரிதிநிதிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நெகிழிப்பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், இதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாதந்தோறும் இறுதி சனிக்கிழமைகளில் நடைபெறும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் நீர் நிலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் கலந்துகொண்டு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தம் அன்றாட வாழ்வில் நெகிழி புறக்கணிப்பை அங்கமாக்கி நெகிழி இல்லா பெரம்பலூர் மாவட்டத்தை முன்னெடுத்து செல்வதில் பங்காற்றுமாறும் கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வினில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயபிரியா, உதவி பொறியாளர் செல்வி.வாணிஸ்ரீ, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், உணவக உரிமையாள்கள், வர்த்தக சங்கத்தினர், ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி தேசிய மாணவர் படை, ரோவர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், மற்றும் பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




