ராமநாதபுரம் கச்சத்தீவு திருவிழா முன்னேற்பாடுகள் ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்ல விண்ணப்பம் பெற பிப்ரவரி 15 கடைசி நாள் வேர்க்கோடு பங்கு தந்தை அறிவிப்பு பக்தர் ஒருவருக்கு ரூபாய் 2000 கட்டணம் மட்டுமே, அதற்கு மேல் வசூலிக்க கூடாது எனவும் அறிவிப்பு.
ராமநாதபுரம் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு செல்ல விண்ணப்பம் பெற பிப்ரவரி 15 கடைசி நாள் வேர்க்கோடு பங்கு தந்தை அறிவிப்பு பக்தர் ஒருவருக்கு ரூபாய் 2000 கட்டணம் மட்டுமே, அதற்கு மேல் வசூலிக்க கூடாது எனவும் அறிவிப்பு மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கச்சத்தீவில் நடைபெற உள்ள அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கு பெறுவதற்கான அழைப்பிதழ் வந்துள்ளது. விண்ணப்பம் பெற பிப்ரவரி 15ந்தேதி கடைசி நாள் என, கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் 'பாக்ஜலசந்தி' கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம். 1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் அந்தோனியார் தேவாலயம் நிறுவப்பட்டது. கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் இங்கு வழிபாடு நடத்துவார்கள். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், சிவகங்கை மறை மாவட்டம் ஊடாக ராமேஸ்வரம் பங்குத்தந்தை அசோக் வினோவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த அழைப்பிதழை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களிடம் வழங்கியும் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கு மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி வழங்குமாறு கோரியும் ஆட்சியரிடம் விண்ணப்பம் செய்தனர். இந்த செய்தியாளர்களை சந்தித்த ராமேஸ்வரம் பங்கு தந்தை அசோக் வினோ இந்தாண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14 வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 15 சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். தொடர்ந்து சிலுவை பாதை நிகழ்ச்சியும், இரவு தேர் பவனியும் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெறும். பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும். கச்சத்தீவு விற்கு செல்லும் பக்தர்களுக்கு ராமேஸ்வரம் வேர்க்கோடு சூசையப்பர் ஆலய வளாகத்தில் உள்ள கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 06ந்தேதியில் இருந்து பிப்ரவரி 15ந்தேதி வரை விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கச்சத்தீவு திருப்பயண அலுவலகத்தில் பிப்ரவரி 25ந் தேதி அன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். விழாவில் கலந்து கொள்ள பக்தர் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படகுகளின் உரிமையாளர்கள் மூலமாகவே நேரடியாக அல்லது திருப்பயண அலுவலகம் மூலமாகவோ ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும், விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் 05 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் 3 பாஸ்போர்ட் புகைப்படங்கள், ஆதார் அட்டையின் நகல், பக்தர் வசிக்கும் காவல் நிலையத்தில் பெறப்பட்ட தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசு பணியாளர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் அலுவலகத்தில் தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை என வேர்கோடு பங்குதந்தை அசோக் வினோ தெரிவித்துள்ளார்.
Next Story