சேஷமூலை மகா மாரியம்மன் கோயிலில்

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை கிராமத்தில், மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அக்கிராமத்தினர், மருளாளிகள் உள்ளிட்டோர் முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (சனி) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. காலை 10 மணிக்கு, கடங்கள் புறப்பட்டு, 10.15 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, சேஷமூலை திருப்பணி குழுவினர், மருளாளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story

