நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்.
நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஸ்ரீ பச்சாயி அம்மன், ஸ்ரீ மன்னார் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்தது. திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. அதிகாலை கோபூஜை, வேதபாராயணம், யாகசாலை வேள்வி, யாகசாலை பூஜை, நாடி சந்தானம் நடந்தது. காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. பின்னர் ஸ்ரீ பச்சாயி அம்மன், ஸ்ரீ மன்னார் ஈஸ்வரன் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிகேத்தை சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் நாட்டார்மங்கலம், ஈச்சங்காடு, மருதடி, நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், ஆலத்தூர்கேட், இரூர், திருவளக்குறிச்சி, பாடாலூர், கூத்தனூர், செட்டிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட நியமனக்குழு தலைவர் ஆ.கலியபெருமாள், பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆலத்தூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வல்லபன், பரம்பரை முறை வழி சாரா அறங்கவாலர் பாலு.ராஜேஷ் (பூசாரி) மற்றும் கிராம பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள், குடிப்பாட்டு மக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
Next Story




