திண்டிவனத்தில் கஞ்சா பறிமுதல் ஐந்து வாலிபர்கள் அதிரடி கைது

X
திண்டிவனம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பதாக வந்த தகவலை தொடர்ந்து நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள் கூட்டேரிப்பட்டு சகாதேவன் மகன் சந்தோஷ்,24; கேணிப்பட்டு லட்சுமணன் மகன் அரவிந்த்,20; என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், இவர்களுக்கு சென்னை, பெரும்பாக்கம் சிவானந்தம் மகன் சிவக்குமார்,21; பெசன்ட் நகர் சிவக்குமார் மகன் ராஜி,27; மேடவாக்கம் ஆறுமுகம் மகன் பாலாஜி, 25; ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி கோவிந்தன் ஆகியோர் கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது.அதன்பேரில், சிவக்குமார், ராஜி, பாலாஜி ஆகி யோரை கைது செய்தனர்.இதை தொடர்ந்து திண்டிவனம் போலீசார், சிவக்குமார் உட்பட 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3.650 கிலோ கஞ்சா மற்றும் நான்கு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.சிவக்குமார், ராஜி, பாலாஜி ஆகியோர் மீது சென்னையில் பல கஞ்சா வழக்குகளும், சந்தோஷ் மீது மயிலம் போலீசில் ஒரு கஞ்சா வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட 5 பேரையும் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வழக்கில் தலைமறைவாக உள்ள ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

