இஸ்ரோ தலைவர்  அனைத்து மாணவர்களுக்கும்  முன்மாதிரி - கலெக்டர் புகழாரம்

இஸ்ரோ தலைவர்  அனைத்து மாணவர்களுக்கும்  முன்மாதிரி - கலெக்டர் புகழாரம்
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் மேலகாட்டுவிளை பகுதியில்  நடைபெற்ற இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக பொறுப்பேற்றுள்ள முனைவர் வி.நாராயணன்  பாராட்டு விழா நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா  கலந்து கொண்டு புத்தகம் வழங்கி பேசுகையில்-       இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளித்துறை செயலாளர் ஆக பொறுப்பெற்றுள்ள முனைவர் வி.நாராயணன் நம் மண்ணின் விஞ்ஞானி  ஆவார். தனது பள்ளி படிப்பை  கீழகாட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலை படிப்பினை ஆதிக்காட்டுவிளை ஊராட்சியில் உள்ள சியோன்புரம் சி.எஸ்.ஐ எல்எம்எஸ் பள்ளியிலும் படித்து முடித்தார்கள்;. தொடர்ந்து நாகர்கோவில், கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்து முடித்த அவர், கரக்பூர் ஐஐடியில் கிரயோஜெனிக் இன்ஜினியரிங் பிரிவில் எம்.டெக் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பி.எச்டி முடித்துள்ளார்.        கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விஞ்ஞானி மாதவன் நாயர் , விஞ்ஞானி சிவன் ஆகியோர் இஸ்ரோ தலைவராக பதவி வகித்திருந்தனர். மூன்றாவதாக தற்போது விஞ்ஞானி வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.            நம்மண்ணை சார்ந்த விஞ்ஞானி விண்வெளி துறையில் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விஞ்ஞானி வி.நாராயணன் அவர்கள் முன்மாதிரியாக திகழ்வார்கள். தொடர்ந்து அவர்களுடைய பணி சிறக்க மனதார வாழ்த்துக்கிறேன் என  பேசினார்.       இந்நிகழ்ச்சியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார்  முன்னாள் மத்திய மாநில அமைச்சர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story