சேதுபாவாசத்திரம் அருகே காணாமல் போன வாய்க்கால்களை மீட்டுத் தர கோரிக்கை

சேதுபாவாசத்திரம் அருகே  காணாமல் போன வாய்க்கால்களை மீட்டுத் தர கோரிக்கை
X
கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சி, வெளிமடம் கிராமத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய கிளை அமைப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது.  கிளை அமைப்பு பேரவைக்கு சு.ராஜாக்கண்ணு தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, பி.எஸ்.ருக்கூன், தாமரைச்செல்வன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  கிளை நிர்வாகிகள் தேர்வு  கிளைத் தலைவராக சு.ராஜாக்கண்ணு,  செயலாளராக ரா.அகில் ராம்,  பொருளாளராக பி.இளங்கோ,  நிர்வாகிகளாக பழநியாண்டி,  மதியழகன், நாடிமுத்து,  மதன்குமார் தேர்வு செய்யப்பட்டார்கள். தீர்மானங்கள் நாடியம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் குளம் (சர்வே எண்:219,140) மற்றும் ஆண்டிக்குளம் (சர்வே எண்:226/1) ஆகிய இரண்டு குளங்களிலும் பாசனத்திற்கு முற்றிலும் தண்ணீர் வராமல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் என்ற பெயரில் முற்றிலும் வாய்க்கால் அடைக்கப்பட்டுள்ளது.  பாசன வாய்க்கால்களை மீட்டு கடந்த இரண்டாண்டுகளாக  குளங்களில் தண்ணீர் சிறை வைக்கப்பட்டதால், 100 ஏக்கர் பாசனப்பரப்பு முற்றிலும் முடங்கி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளார்கள். கடந்த இரண்டாண்டுகளாக விவசாயம் செய்ய முடியாததால், எந்தவித வருமானமும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காணாமல் போன வாய்க்கால்களை மீட்டுத் தர வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்யாமல் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை எழுப்புவது, குறித்த காலத்தில் கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில், சுற்று வட்டார விவசாயிகளோடு இணைந்து நேரடி களப் போராட்டம் நடத்தி விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்பது" என முடிவு செய்யப்பட்டது.
Next Story