புத்தக திருவிழா பள்ளி மாணவ - மாணவியர் முகாம்

X

புத்தக திருவிழா பள்ளி மாணவ - மாணவியர் முகாம் சிறுவருக்கான புத்தகம் வாங்க ஆர்வம்
காஞ்சிபுரம் மாவட்ட புத்தக திருவிழா, கடந்த 31ல், கலெக்டர் வளாக மைதானத்தில் துவங்கியது. ஏராளமான புத்தக அரங்குகளில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிபடுத்தப்பட்டுள்ளன.வரும் 10ம் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் எழுத்தாளர்களின் சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதல் நாளான நேற்று, தன்னம்பிக்கை பேச்சாளர்கள் ராமகிருஷ்ணன், நாதன், கோபிநாத் ஆகியோர் நேற்று பேசினர். இன்று, ஈரோடு மகேஷ், 'கலக்கப் போவது யாரு' குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அனைத்து வயதினருக்கும் புத்தக திருவிழாவில் ஏராளமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ - மாணவியருக்கான புத்தகங்கள் பல அரங்குகளில் அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிகிறது. இந்த அரங்குகளில் பள்ளி மாணவ - மாணவியர் ஏராளமானோர் நேற்று முகாமிட்டு, ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். குறைவான விலையிலேயே அதிக புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதால், மாணவர்கள் பலரும் வாங்கினர். சிறுகதை, ஓவியம், கணித குறிப்புகள், தலைவர்களின் வாழ்வியல், கணித விளையாட்டு, அறிவியல், வானிலை என, பல்வேறு தலைப்புகளின் கீழ் நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் சிறுவர்களுக்காக காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவ - மாணவியர், தாங்கள் விரும்பிய புத்தகங்களை படித்து பார்த்து வாங்கி சென்றனர். மாணவர்கள், குழந்தைகள் கையாளும் வகையில், கணிதம், அறிவியல் பாடங்களை மையப்படுத்திய விளையாட்டு உபகரணங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. புத்தக கண்காட்சியில், போட்டித்தேர்வு, போலீஸ் தேர்வு, கதை புத்தகங்கள் பல உள்ளன. ஆண்டுதோறும் நான் இந்த புத்தக திருவிழாவுக்கு ஆர்வத்துடன் வருவேன். அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
Next Story