ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபடும் திருவிழா - அறுவடைக்கு பின் அம்மனுக்கு பொங்கல் வைத்து நன்றி

X

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே தேவபட்டு கிராமத்தில் ஆண்கள் மட்டுமே வழிபடும் பாரம்பரிய பொங்கல் திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தேவபட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பிறகு. அந்தரநாச்சி அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் பல நூறு ஆண்டுகளாக செவ்வாய் பொங்கல் மற்றும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். இந்த பொங்கல் விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பர். பெண்கள் கலந்து கொள்வதில்லை. அதன்படி நேற்று தேவபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மண்பானைகள், பூசணிக் காய்களுடன் ஊர்வலமாக அருகேயுள்ள மணிமுத்தாறுக்கு சென்றனர். அங்கு ஆற்றில் ஊற்று தோண்டி, பனை ஓலையில் தண்ணீர் அள்ளி மண்பானைகளை நிரப்பினர். தொடர்ந்து தண்ணீர், பூசணிக் காய்களுடன் அந்தரநாச்சியம்மன் கோயில் அருகே மஞ்சுவிரட்டு தொழுவுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து பூசணிக்காய்களை கூட்டு வைத்து பொங்கலுடன் சாப்பிட்டனர். பின்னர் கிராமத்தில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து காளைகளுக்கு மரியாதை செய்தனர். அதன் பின்னர் மஞ்சுவிரட்டு தொடங்கியது. தொழுவில் இருந்து 100 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 25-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். முன்னதாக ஆங்காங்கே கட்டு மாடுகளாக 320 காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.
Next Story