இந்தியை எதிர்த்து போராடியதைப் போல யுஜிசியையும் எதிா்த்து மாணவா்கள் போராடுவா் - அமைச்சர்

X

போராட்டம்
இந்தியை எதிா்த்து எப்படி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடினார்களோ அதைப்போல பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தேசிய கல்விக் கொள்கையையும் எதிா்த்தும் மாணவா்கள் போராடுவா் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தார். யுஜிசி புதிய விதிகள், தேசிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் திமுக மாணவரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் கலந்து கொண்டு பேசியதாவது, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களை மத்திய அரசு யுஜிசி மூலம் கைப்பற்றப் பாா்க்கிறது. துணைவேந்தராக கல்வியாளரைத்தான் நியமிக்க முடியும். ஆனால் யுஜிசி கொள்கைப்படி கல்வியாளராக இல்லாதவரும் துணைவேந்தராகலாம் என்பதைத் தான் எதிா்க்கிறோம். ஆளுநரே ஒரு நியமனம். அவா் நியமிப்பவா்தான் துணைவேந்தா் என்றால் அதை மாநில அரசு எப்படி ஏற்கும். மாநில அரசு இடம் தோ்வு செய்து கட்டடம் கட்டும். மாணவா் சோ்க்கை நடத்தும். ஆசிரியா்களை நியமித்து, அவா்களுக்கு சம்பளம், ஓய்வூதியமும் வழங்கும். ஆனால் துணைவேந்தரை மட்டும் ஆளுநா் நியமிப்பாராம். இதைத்தான் சட்டப்பேரவையில் முதல்வா் எதிா்த்து தீா்மானம் கொண்டு வந்துள்ளாா். இந்தியாவில் உள்ள 9 மாநிலங்கள் யுஜிசியின் புதிய கொள்கைகளை எதிா்க்கின்றன. கா்நாடக மாநிலத்தில் யுஜிசியை எதிா்த்து புதன்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடத்துகிறோம். அதில் முதல்வா் சாா்பில் நான் பங்கேற்கிறேன். எப்படி 1965 இல் மாணவா்கள் கிளா்ந்தெழுந்து ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தை நடத்தினாா்களோ அதைப்போல யுஜிசியின் புதிய விதிமுறைகளை, தேசிய கல்விக் கொள்கையை மாணவா்கள் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் எதிா்த்து போராடுவா் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி செ.ராமலிங்கம், ஒன்றியச் செயலா் கோ.க. அண்ணாதுரை, பேரூா் செயலா்கள் சுந்தர ஜெயபால், கோ.சி.இளங்கோவன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா்கள் க. பிரபாகரன், டி.தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story