ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தர நியமிக்கப்பட்ட குழுவை ரத்து செய்து

X
நாகை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயற்குழு மற்றும் அனைத்துச் சங்க போராட்டக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழகன், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநிலச் செயற்குழு மற்றும் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு முடிவுகளை எடுத்துக் கூறினார். வருகிற 10-ம் தேதி காலை முதல் மறுநாள் 11-ம் தேதி காலை வரை 24 மணிநேரம் நடைபெறவுள்ள தர்ணா போராட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து, மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் எடுத்துக் கூறினார். மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா பேசினார். கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம், தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம், மீன்வளத்துறை ஊழியர் சங்கம், வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம், வனத் துறை ஊழியர் சங்கம், எம்.ஆர்.பி. செவிலியர் சங்கம், கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்கம், வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்கம், ஏ.டி.ஜே.டி. பாலிடெக்னிக் ஊழியர் சங்கம், நீதித்துறை ஊழியர் சங்கம், நகராட்சி ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, சத்துணவு ஊழியர், எம்.ஆர்.பி. செவிலியர், அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்களுக்கு ஊதியக் குழு வரையறுத்துள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல், சாலைப் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 41 மாத கால பணிநீக்க காலத்தை வரன்முறை படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை காசாக்குவதை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட, தமிழக முதல்வர், தேர்தல் நேரத்திலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டிலும், ஜாக்டோ-ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற 10-ம் தேதி நாகையில் நடைபெறவுள்ள 24 மணி நேர தர்ணாவில் அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் முழுமையாக கலந்து கொள்வது என்றும், பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து 9 மாதத்தில் அறிக்கை தருவதற்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் தலைமையில் குழு அமைத்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள செயல், தமிழக முதல்வரின் வாக்குறுதிகளுக்கு எதிரானது, தேவையற்ற காலதாமதத்தை உருவாக்குவது, கண்டனத்திற்கு உரியது என்பதால் அந்த குழுவை ரத்து செய்துவிட்டு, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் த.ஸ்ரீதர் நன்றி கூறினார்.
Next Story

