அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் முழுமையான தயாரிப்பு விவரம்

அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் முழுமையான தயாரிப்பு விவரம்
X
இல்லையெனில் குளிர்பானங்கள் கைப்பற்றப்பட்டு அபராதம்- உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
நாகை நகராட்சிக்குட்பட்ட வெளிப்பாளையம் பகுதியில், பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பாக்கெட் குளிர்பானத்தை, நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் ஆய்வு செய்தபோது, அந்த குளிர்பான பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்புத் துறை உரிமம் எண் உள்ளிட்ட எந்தவொரு விபரமும் இல்லாததால், அவற்றை கைப்பற்றி அழிக்க நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகனுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், நேற்று ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பான பாக்கெட்டுகள் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது. இது குறித்து, நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியதாவது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி, குளிர்பானத்தை தயாரித்து விநியோகம் செய்த நபருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் அடைக்கப்பட்ட குளிர் பானங்களில் முழுமையான தயாரிப்பு விபரங்கள் இருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குளிர்பானங்கள் கைப்பற்றப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். உணவு விற்பனை தொடர்பான புகார்களை, மாநில உணவு பாதுகாப்பு ஆணையரக வாட்ஸ்அப் புகார் எண் 9444042322 -ல் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story