கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் இருவர் கைது
போரூரில் 28 லட்சம் மதிப்புள்ள பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எடுத்து வந்த இருவர் கைது பூந்தமல்லி அருகே போரூரில் குன்றத்தூர் சாலை எம்.எஸ்.நகர் அருகே போரூர் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 28 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போரூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவர்கள் அனகாபுத்தூர் நேதாஜி தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் (34), பாலாஜி நகர் சேர்ந்த அங்குராஜ்(37) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட், கவரிங் நகை விற்பனை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு நன்கு அறிமுகமான இஸ்மாயில் என்ற நபர், தனது உறவினரான சீர்காழியைச் சேர்ந்த சதாம் என்பவரிடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், பண மதிப்பிழப்பின் போது அவர் வெளிநாட்டில் இருந்ததால் அவரிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமல் போனதாகவும் அதனை மாற்றி தரும்படியும் கேட்டுள்ளார். அப்படி மாற்றி கொடுத்தால் அதற்கு உரிய கமிஷன் தொகை கொடுப்பதாகவும் இஸ்மாயில் இவர்கள் இருவரிடமும் தெரிவித்துள்ளார். இதையடுத்து இவர்கள் தங்களுக்கு அறிமுகமான கோயம்பேட்டை சேர்ந்த சிவா என்பவரிடம் அணுகியபோது அவர் ஒரு லட்ச ரூபாய்க்கு 4000 மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர்கள் இஸ்மாயிலிடம் தெரிவித்த போது அதற்கு ஒத்துக் கொண்டு, 3 ஆயிரம் பணத்தை தங்களிடம் கொடுத்து விடவும், மீதி ஆயிரம் ரூபாயை கமிஷனாக வைத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு சீர்காழியைச் சேர்ந்த சதாம், தனக்கு தெரிந்தவரான கோயம்பேட்டைச் சேர்ந்த விக்கி என்பவரிடம் 28 லட்சம் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். விக்கியிடம் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட ரஞ்சித்குமாரும், அங்குராஜும் கடந்த 20 நாட்களாக அதனை மாற்றுவதற்காக பல்வேறு இடங்களில் சுற்றி அலைந்து வந்துள்ளனர். இதற்கிடையே இவர்களது நண்பரான வடபழனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறியுள்ளார். அதனால் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வடபழனிக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். அங்கு கார்த்திக் அவருக்கு தெரிந்தவரான காவிரி ரெபினா என்ற பெண்மணியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இரண்டு மணி நேரம் கழித்து வந்து அந்த பணத்தை கொடுத்து விட்டு போங்கள். ஒரு லட்ச ரூபாய்க்கு நான்கு ஆயிரம் விதம் நாளை வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று இவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு ஒத்துக்கொள்ள மறுத்த இவர்கள் இருவரும் அந்த பணத்துடன் திரும்பி அனகாபுத்தூருக்கு சென்றுள்ளனர் அப்போது போரூரில் போலீசாரின் சோதனையின் போது இருவரும் சிக்கி உள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போரூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story





