நீலாயதாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு

யானை மீது கலச தீர்த்தம் கொண்டு வரும் விழா கோலாகலம்
சப்தவிடங்க தலங்களில் ஒன்றாக திகழும், நாகை அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவில் பிரசித்திப் பெற்ற சிவத்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், குடமுழுக்கு பெருவிழா வருகிற 10-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, சாபம் தீர்த்த விநாயகர் கோவிலில் இருந்து யானை மீது கலச தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக, கங்கை, யமுனை, சிந்து, கோதாவரி, நர்மதை உள்ளிட்ட 9 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யானை மேல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில், குதிரை நடனம், சிவ வாத்தியம், நாதஸ்வர மேளக் கச்சேரி, ட்ரம்ஸ், தாரை தப்பட்டை என வாத்தியங்கள் களை கட்டியது. அப்போது, நீலாயதாட்சி அம்மனுக்கு விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து, வாத்திய இசைக்கு ஏற்றவாறு ஆட்டம் போட்டும், பாட்டுப்பாடியும், கும்மியடித்தும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில், தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தேவாரத்துறை மாணவர் நல சங்க பக்தர்கள், தேவார திருமுறை சேர்ந்திசை பாராயண பாடல்களைப் பாடியபடி வந்தனர். இதனால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
Next Story