அரசு அறுவடை இயந்திரங்கள் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை

மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை
நாகை மாவட்டத்தில், நடப்பாண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், காற்றோடு பெய்த மழையின் காரணமாக சம்பா பயிர்கள் அடியோடு தரையில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. மேலும், உதிர்ந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்க தொடங்கியது. இதனால் மகசூல் பாதித்து விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். எஞ்சிய பயிர்களை அறுவடை செய்ய, நாகை மாவட்டத்தில் அரசு அறுவடை இயந்திரங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால், தனியார் அறுவடை இயந்திரங்களை அதிக வாடகைக்கு எடுக்க வேண்டி உள்ளது. தனியார் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.3,400 வாடகை வசூலிப்பதுதாகவும், தரையில் சாய்ந்த கதிர்களை அறுவடை செய்ய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதால் அதிக செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். வேளாண் துறை சார்பில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்கள் குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு தமிழக அரசுக்கு சென்று சேர்ந்ததா? குருவை பயிர்களைப் போல் சம்பாவிற்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா கிடைக்காதா? என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக, நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் போது, 35 ரூபாயிலிருந்து தற்போது 45 ரூபாய் கட்டாய வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் நலன் கருதி, அறுவடை இயந்திரங்கள் கூடுதலாக கிடைக்கவும், பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story