குடமுழுக்கு விழாவையொட்டி மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

X
குடமுழுக்கு விழாவையொட்டி, தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஆறு கால யாக பூஜைகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதில், அம்மன், துர்க்கை அம்மன் பேச்சியம்மன் சன்னதிகளின் கோபுரத்தில் புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் மெருகூட்டப்பட்டு, பொருத்தப்படவுள்ளன. இதுபோல, மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், கோயில் கொடி மரத்திலும் செப்புக்கவசம் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளன. இப்பணியை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பார்வையிட்டார். மேலும், குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு. பாலகணேஷ், அரண்மனை தேவஸ்தான அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கோ. கவிதா, செயல் அலுவலர் ந. மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

