ஒன்பதாம் ஆண்டு புத்தகத் திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் 9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழா – கலைமாமணி, பேராசிரியர், முனைவர் கு.ஞானசம்பந்தம் அவர்கள் தலைமையிலான பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது - ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் நகராட்சித்திடலில் நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தகத்திருவிழாவின் ஏழாவது நாளான ஏராளமாக பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் புத்தக அரங்குகளை ஆர்வமுடன் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில்,ஒரு லட்சத்திற்குப் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தகத்திருவிழாவில் வாங்கப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றது. 31.1.2025 அன்று பெரம்பலூர் நகராட்சித்திடலில் தொடங்கப்பட்ட புத்தகத்திருவிழாவை 5.2.2025 வரை 27,825 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுவரை ரூ.34,09,305 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சிகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைத்தனர். இன்றைய நிகழ்ச்சியில் பாவலர்.அறிவுமதி அவர்கள் "யாவரும் கேளீர்" என்ற தலைப்பிலும், பேராசிரியர், முனைவர்.த.ராஜாராம் அவர்கள் "கற்கை நன்றே" என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து, கலைமாமணி, பேராசிரியர், முனைவர்.கு.ஞானசம்பந்தம் அவர்கள் நடுவராக பங்கேற்கும் "இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள் படிக்கல்லா? தடைக்கலா?" என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சிந்தனை அரங்கில் எழுத்தாளர்கள், கவிஞர்களின் கருத்துரைகளை கேட்டறிந்து, பட்டிமன்ற நிகழ்ச்சியினை பார்வையிட்டு மகிழ்ந்தனர். எட்டாம் நாளான நாளை (07.02.2025) எழுத்தாளர்.நாஞ்சில் நாடன் "கொங்குதேர் வாழ்க்கை" என்ற தலைப்பிலும், பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் "பெயரில் என்ன இல்லை" என்ற தலைப்பிலும், எழுத்தாளர் 'சுளுநீதி' இரா.முத்துநாகு "தமிழர் அறிவியலான சித்த மருத்துவம்" என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story





