ஆளுநர் வரைமுறைகளை மீறியதால் உச்சநீதிமன்றத்துக்கு சென்றோம் : உயர் கல்வித் துறை அமைச்சர் பேட்டி
தமிழக ஆளுநர் வரைமுறைகளை மீறியதால் உச்ச நீதிமன்றத்தை நாடுகிற நிலை ஏற்பட்டது என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நாள் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்தவொரு பிரச்னையை முன்னிறுத்தினாலும், அதற்கு தமிழகம்தான் முன்னின்று அதற்கான மணியோசையை எழுப்பியுள்ளது. மாநில உரிமை, மாநில சுயாட்சி என்றாலே தமிழ்நாடுதான் மற்ற மாநிலங்களுக்கு நினைவுக்கு வரும். மாநில ஆளுநருக்கு சில வரைமுறைகள், சில அளவுகோல்கள், சில நெறிமுறைகள் உண்டு. அதை மீறுகிற நேரத்தில்தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுகிற நிலை ஏற்பட்டது. தமிழக ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள், வரைமுறைகள் மற்ற மாநிலங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ஒரே ஜனநாயக போராளி தமிழ்நாடு முதல்வர் மட்டுமே. இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.96 கோடி மதிப்பில் வாகனங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இவ்விழாவில் 100 பேருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 100 வண்டிகள் விரைவில் வழங்கப்படும்" என்றார் அமைச்சர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பா.பியரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜராம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



