தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலையில் இருந்தாலும் அச்சப்படத் தேவையில்லை

X
தமிழ்நாட்டில் 240 வட்டாரங்களில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலையில் இருந்தாலும், அச்சப்படத் தேவையில்லை என மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தென் கிழக்கு கடலோர மண்டல இயக்குநர் எம். சிவகுமார் தெரிவித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீடித்த நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் வகைப்படுத்துதல் பணி செய்யப்பட்டது. இதில், அகில இந்திய அளவில் நிலத்தடி நீர் 60 சதவீதம் பாதுகாப்பான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் 30 சதவீதம் பாதுகாப்பான நிலையில் இருக்கிறது. மீதமுள்ள 70 சதவீதம் பகுதி பாதி நெருக்கடி நிலையிலும், முழு நெருக்கடி நிலையிலும், அதிக அளவிலான சுரண்டல் நிலையிலும் உள்ளன. இந்த நிலைமை 246 வட்டாரங்களில் நிலவுகிறது. எந்த மாநிலம் தொழிலிலும், வேளாண்மையிலும் முன்னோடியாக இருக்கிறதோ, அங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கு நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படுகிறது என்றால், தமிழ்நாடு முன்னேறி வருகிறது என்பதுதான் அர்த்தமே தவிர, அதற்காக அச்சப்பட வேண்டிய தேவையில்லை. இந்த வளர்ச்சி நீடித்திருப்பதற்கும், வருங்காலத்திலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதற்கும் நிலத்தடி நீர் ஆதாரம் தொடர வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 80 சதவீத தண்ணீர் வேளாண்மைக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. நெல் சாகுபடியில் ஒரு போகத்துக்கு 1.5 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேவைப்படும். இதைத் தவிர்க்க தெளிப்பு நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம் போன்ற வகைகளில் நெறிப்படுத்தினால், நிலத்தடி நீர் நீடித்திருக்கும். இதைச் செய்தால் தமிழ்நாடு தொடர்ந்து முன்னோடி மாநிலமாகத் திகழும். இதற்காக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மத்திய அரசு ஒருங்கிணைந்த நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், வளமான தமிழ்நாட்டை உருவாக்க முடியும். தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக ரூ. 3 ஆயிரத்து 500 கோடியில் பெருந்திட்டத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் தயார் செய்து வருகிறது. நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுதலை தடுப்பதற்காக ஆழ்குழாயில் தானியங்கி நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீரில் உவர் நீர் இருப்பதை அறிந்து கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது. இத்திட்டத்தை மத்திய அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 1,000 இடங்களில் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலிருந்து 5 கி.மீ. தொலைவுக்கு நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதைத் தடுப்பதற்கு 100 மீட்டர் ஆழத்துக்குள் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும், 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்துக்கு சென்று தண்ணீர் எடுக்குமாறும் அறிவுரை வழங்கப்படுகிறது" என்றார் சிவக்குமார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொ) க. சங்கர், பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம், ஆட்சிக் குழு உறுப்பினர் பெ. பாரதஜோதி, தொழில் மற்றும் நில அறிவியல் துறைத் தலைவர் ஆர். நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

