நிரந்தர கல் தூண் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறி சாகுபடி

நிரந்தர கல் தூண் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறி சாகுபடி
X
தோட்டக்கலை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக, தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல் தூண் பந்தல் அமைத்து கொடி வகை காய்கறிகள் சாகுபடி செய்யவுள்ள இடத்தை கொத்தமங்கலம், ஆலத்தூர், துறையூர், சியாத்தமங்கை, கொங்கராயநல்லூர் கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் திருமருகலில், கருணாநிதி என்பவருக்கு சொந்தமான இடத்தை தோட்டக்கலை உதவி இயக்குனர், துணை தோட்டக்கலை அலுவலர் சாமிநாதன், திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தோட்டக்கலை உதவி இயக்குனர் கூறியதாவது காய்கறி செடிகள் பூமியில் படர விடுவதை விட பந்தல்களில் படர விடும்போது விளைச்சல் கூடுதலாக கிடைக்கும். களை எடுக்கத் தேவையில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கினாலும் பிரச்னை இல்லை. இடுபொருள்களைத் தெளிக்கவும் எளிதாக இருக்கும். நிலத்தில் செடிகள் படர்ந்தால் காய்கள் சேதமாகும். விளைச்சலும் அவ்வளவாக இருக்காது. பந்தலில் கொடி படர்ந்து காய்கள் தொங்கும்போது எந்தச் சேதமும் இல்லாமல் பறித்து உடனடியாக சந்தைக்குக் கொண்டு போக முடியும். மக்களும் பார்த்த உடன் கிலோ கணக்கில் வீட்டுக்கு வாங்கி செல்வார்கள். இதனால் விலையும் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story