பொது தேர்வை எதிர் கொள்ளுதல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உரையாற்றினார்

பொது தேர்வை எதிர் கொள்ளுதல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உரையாற்றினார்
X
பொது தேர்வை எதிர் கொள்ளுதல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், உரையினை சுமார் 51,000 மாணவர்கள் நேரலையில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பொது தேர்வை எதிர் கொள்ளுதல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வலையொளி (YOUTUBE) நேரலையில் உரையாற்றினார். இந்த நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தற்போது பொதுத்தேர்வு ஆரம்பிக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம். தேர்வுகள் என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு தொடர் நிகழ்வு. 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்வு, அடுத்து நீங்கள் உயர்கல்விக்கு செல்கின்ற பொழுது நிறைய தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு வேலைக்கு, ஒரு பொறுப்புக்கு அல்லது ஒரு தனியார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட தேர்வுகளை எழுதி வெல்ல வேண்டும். பிறகு ஒரு பணிகள் சேர்வதற்;கும் பிறகு பல்வேறு இடங்களில் அது அரசுப்பணி அல்லது தனியார் பணியாக இருந்தாலும் அதில் நிறைய பதவி உயர்வுகளுக்கான தேர்வுகள் கூட இருக்கின்றன. இப்படி தேர்வுகள் என்பது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய ஒரு செயல்பாடு. ஆனால் நாம் ஒன்றை மட்டும் மிக நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டில், ஒரு போரில் முதலில் அவர் தன்னுடைய மனதளவில் வென்று இருக்கிறாரா என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதுபோல இந்த தேர்வினை மாணவர்கள் மனவலிமையோடு எதிர்கொள்ள வேண்டும். இந்த காலகட்டங்களில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும், நேரங்களும் மிக முக்கியமானது. மாணவச் செல்வங்கள் இந்த இளம் பருவத்தில் அதை அறிந்து கொள்வது உங்களுக்கான வெற்றியை எளிதாக்கும். எந்த ஒன்றையும் திரும்பத் திரும்ப தொடர்ச்சியாக செய்வதன் மூலமாக உங்களுக்கு அந்த திறமை வருகிறது. எனவே ஒரு சிறந்த படிப்பாளி என்று யாரும் இருப்பதில்லை. தொடர்ச்சியாக அதன் மீது ஆர்வத்தோடு, அதனை முயற்சி செய்பவர் வெற்றி பெறுகிறார். கவனச் சிதறல் என்பது மாணவர்களுக்கு மட்டும் இருக்கக்கூடிய பிரச்சனை இல்லை. இப்பொழுது இருக்கக்கூடிய உலகத்தில் எல்லோருக்கும் எல்லா காலகட்டத்திலும் இருக்கக்கூடிய பிரச்சனைதான். உங்களுடைய கவன சிதறல்களை வேறு நல்ல ஒன்றுக்கு திருப்புங்கள். நமது மாவட்டம் பள்ளி பொதுத் தேர்வு தேர்ச்சியில் சிறந்த ஒரு மாவட்டமாக தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பொதுத்தேர்வுகளில் மாணவச் செல்வங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் மிகுந்த மன வலிமையோடு தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக எப்படி ஒரு தொடர் ஓட்டத்தில் கடைசி ஓட்டம், கடைசி சுற்று என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று இந்த தேர்வு நாட்களில் நீங்கள் இன்னும் மிகுந்த ஆர்வத்தோடும், மன மகிழ்ச்சியோடும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். தேர்வு என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே தான் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. இந்த தேர்வில்; எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் இன்னும் மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்திருக்குமே என்று நினைத்துப் பார்த்தால் அது திரும்ப கிடைக்க முடியாத ஒன்று. எதிர்காலத்தில் இப்படி ஒரு நாட்களை வீணடித்து விட்டோமே அல்லது அந்த நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இன்று நான்; மகிழ்ச்சியாக இருந்திருப்பேனே என்றும், வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யோசித்தால் நிச்சயமாக அந்த வாய்ப்புகள் பெரும்பாலும் திரும்ப வரப்போவதில்லை. நீங்கள் படித்ததை இன்னும் ஒரு முகத்தோடு அதை குவியப்படுத்தி, கவனப்படுத்தி தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதும், ஒரு சில பாடங்களில் கவனக்குறைவு அல்லது ஆர்வமாக இல்லை என்றால் அடுத்து வரக்கூடிய வாரங்களில் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.   தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் வருவது, குறைவான மதிப்பெண்கள் வருவது, வெற்றி தோல்வி வருவது என்பதெல்லாம் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இன்று ஒரு வெற்றியை பெறுபவர் நாளை ஒரு தோல்வியை சந்திப்பார். ஒரு தோல்வியை சந்திப்பவர் நாளை ஒரு வெற்றியை சந்திப்பார். வெற்றியும் தோல்வியும் ஒரு சாலையினுடைய மேடு பள்ளங்களை போன்றது. ஆனால் இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது, என்னால் எவ்வளவு சிறப்பாக அதில் செயல்பட முடியுமோ, என்னுடைய முழு ஈடுபாட்டை எவ்வளவு கொடுக்க முடியுமோ, என்னுடைய ஆர்வத்தை எவ்வளவு முழுமையாக வளர்க்க முடியுமோ, நாளை நான் இதை செய்யாமல் போய்விட்டேன் என்று வருத்தம் கொள்ளாத அளவுக்கு எப்படி செயல்பட முடியுமோ, அப்படி செயல்படுங்கள். படிப்பு என்பது மிக மகிழ்ச்சியான ஒன்று. உலகின்; பல்வேறு இடங்களில் இது போன்று ஒரு நல்ல சூழல்களில் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாத குழந்தைகள் இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு. யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்த்தால், தங்களுக்கான வாய்ப்புகளை தவறவிடாதவர்கள், தங்களுடைய வாய்ப்புகள் குறித்து நல்ல விழிப்புணர்வு பெற்றவர்கள் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கைப்பேசி, இணையதள வாய்ப்புகள் என்பது ஒரு இரண்டு பக்கமும் கூர்மையான ஒரு கத்தியை போன்றது. அதை எவ்வளவு லாவகமாக பயன்படுத்தி நமக்கு ஏற்ப அது பயன்படுத்திக் கொள்கிறோமோ அதில்தான் ஒருவருடைய வெற்றி இருக்கிறது. உலகம் முழுவதும் நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. இந்தியா முழுமைக்கும் நடக்கக்கூடிய போட்டித் தேர்வுகள் என்பது நிறைய இருக்கிறது. நமது மாவட்டத்திலேயே ஒரு சாதாரண கிராமத்தில் அரசு பள்ளியில் எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் படித்த மாணவர்கள் இன்று இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் இருக்கின்றார்கள். அதற்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் காரணம். அவர்கள் பெற்ற ஆர்வம். இந்த தேர்வு காலகட்டத்தில் நீங்கள் படிப்பதற்கும், கல்வியின் வழியாக உயர்வதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். தேர்வுகள் குறித்து ஒருபோதும் பயம் வேண்டாம். ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் தேர்வுகள் வரும். இது ஒரு இறுதித் தேர்வு அல்லது நிலையான தேர்வு இல்லை. ஒன்றே ஒன்றை மட்டும் தான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள் வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைகிறார்கள். நமது மாவட்டத்தினுடைய குழந்தைகள் மகிழ்ச்சியை பெறக்கூடிய குழந்தைகளாக, கல்வியின் வழியாக மிகப்பெரிய வாய்ப்புகளை பெறக்கூடிய குழந்தைகளாக பொது தேர்வு கால கட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும், மிகுந்த தன்னம்பிக்கையோடும் உங்களால் எவ்வளவு முடியுமோ உங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி தேர்வை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வலையொளி (YOUTUBE) நேரலை நிகழ்ச்சியினை 90 அரசு உயர்நிலை பள்ளிகள், 100 அரசு மேல்நிலை பள்ளிகள், 67 அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள், 54 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 311 பள்ளிகளைச் சேர்ந்த 10- ஆம் வகுப்பு பயிலும் சுமார் 25,000 மாணவர்கள், 11- ஆம் வகுப்பு பயிலும் சுமார் 26,000 மாணவர்கள் என மொத்தம் 51,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
Next Story