கால்நடை -கோழி வளர்ப்பில் நோய் மேலாண்மை

பயிற்சி பெற்ற 60 பெண்களுக்கு சான்றிதழ்
நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, நாகை மாவட்ட மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் நோய் மேலாண்மை என்ற தலைப்பில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப வல்லுநர் பார்த்தசாரதி வரவேற்றார். ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் சி.சுரேஷ் திட்ட விளக்க உரை அளித்தார். உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். நாகை நகராட்சி தலைவர் ரா.மாரிமுத்து வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் பேசுகையில், இன்றைய பொருளாதார சூழ்நிலையில், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பின் முக்கியத்துவத்தையும், அவைகளுக்கு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டால், மரபு சார்ந்த மூலிகை மருத்துவத்தை தாமே கற்று அதனை நடைமுறைப்படுத்தும் போது கால்நடைகளுக்கு பக்க விளைவுகள் இன்றி உடனே நோய் சரியாகவும், நோய் வருவதால் ஏற்படும் செலவினங்கள் குறையவும் இப்பயிற்சி உதவுகிறது. மாறி வரும் காலநிலை மாற்றத்தில், புதிய நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் பரவுகிறது. இந்நிலையில் இப்பயிற்சியானது, மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு அளிக்கும்போது, ஏதேனும் நோய் தொற்று ஏற்படும்போது அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள மூலிகைகளை வைத்து கால்நடைகளை குணப்படுத்த உதவும். எனவே இப்பயிற்சியை பயன்படுத்தி மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் விவசாயிகள் கால்நடை உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றார். பின்னர் நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற 60 பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் முதலுதவி மருந்து, மூலிகை செடி உள்ளிட்ட இடுபொருட்களை வழங்கினார். முடிவில், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வாழ்வாதாரம் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
Next Story