மீன் வரத்து குறைவு -விலை உயர்வு

விலையை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்ற மீன் பிரியர்கள்
நாகை மாவட்டத்தில், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நம்பியார் நகர், விழுந்தமாவடி,கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் 500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.  கடந்த வாரம் நாகை துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசை படகுகளில், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரை திரும்பின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் பிரியர்கள், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் என ஏராளமானோர் நாகை துறைமுக மீன் இறங்குதளத்தில் குவிந்தனர். கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு போதுமான மீன்கள் வலையில் கிடைக்காததால்,ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். மீன் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயர்ந்து உள்ளது. இருந்த போதும், விலையைப் பொருட்படுத்தாமல் மீன் பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர். நாகை துறைமுக மீன் இறங்கு தளத்தில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் வருமாறு வஞ்சிரம் ரூ.600, புள்ளி நண்டு ரூ.650, கண் நண்டு 400, வெள்ளை வாவல் 800, கருப்பு வாவல் 650, ஏற்றுமதி ரக வாவல் 1200, துள்ளுகெண்ட 450, பாறை 400, கடல் விரா 650, இறால் 300 முதல் 650 வரை, பெரிய கனவா 500, சிறிய வகை கணவா 200 முதல் 400 வரை, சீலா 450, கிழங்கான் 400, நெத்திலி 300.
Next Story