கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில்
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன், நீடாமங்கலம் நீலன் பள்ளி இணைந்து வேவ்ஸ் & வெட் லேண்ட் என்ற கல்விப் பயணத்தை தொடங்கினர். இதில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்துடன் இணைந்து தேசிய மாணவர் படை மாணவர்களும், நீலன் பள்ளியின் இயற்கை சங்க மாணவர்களும் கலந்து கொண்டனர். கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சதுப்பு நில பகுதிகளைப் பார்வையிட்டு, அங்குள்ள பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களான வெளிமான், புள்ளிமான், பறவைகள் ஆகியவற்றைப் பற்றிக் கற்றறிந்தனர். மேலும், சதுப்பு நிலம் குறித்த முக்கியத்துவத்தையும், அவை சுற்றுச்சூழலுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் ஏற்படுத்தும் நல் விளைவுகளையும், வெளிநாட்டு வலசை பறவைகளுக்கும் ஏற்படுத்த கூடிய நன்மைகளையும் கற்றறிந்தனர். அதனைத் தொடர்ந்து, கோடியக்கரை கடற்கரைப் பகுதியில், குப்பைகளைச் சேகரித்து, மாசுபடுதலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சேகரித்த சுமார் 150 கிலோ எடை உள்ள குப்பைகளை, குப்பை கிடங்கில் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில், நீடாமங்கலம் நீலன் பள்ளி செயலாளர் சுரேன் அசோகன், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குநர் கீர்த்திவாசன் தாமோதரன், தேசிய மாணவர் படையின் பொறுப்பாளர் (விமானப் படை பிரிவு) ஆர்.கார்த்திக், பள்ளி அலுவலக உதவியாளர் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




