விநாயகபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

X
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம், விநாயகபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நூறு ஆண்டுகள் கடந்த பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழா நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து விநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், செய்யாறு தொடக்க கல்வி அலுவலர் வீரமணி, வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். மேலும் இது ஆரணி எம்.பி பேசுகையில், தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலம் கல்விக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மேலும் கல்வி ஒன்று தான் அனைவருக்கும் அடிப்படையானது, ஆகவே கல்வி மட்டுமே அனைவருக்கும் எளிதாக கிடைக்க திமுக அரசு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும், என்று பேசினார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், ஆரணி தொகுதி எம்.பி. தரணிவேந்தன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர்எ.வ.வே. கம்பன் ஆகியோர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி, ஆடல், பாடல், நாடகம், உள்ளிட்டவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் மாணவர்கள் பள்ளிக்குத் தேவையான பீரோ, நாற்காலிகள், மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவி உள்ளிட்டவைகளை பள்ளிக்கு வழங்கினார்கள். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சுகுமாரன், நன்றி கூறினார்.
Next Story

