ஆன்லைன் பதிவுகளை செய்ய நெருக்கடி,  மருத்துவ சேவை குறைபாடு ஏற்பட வாய்ப்பு: செவிலியர்கள் சங்கம்

ஆன்லைன் பதிவுகளை செய்ய நெருக்கடி,  மருத்துவ சேவை குறைபாடு ஏற்பட வாய்ப்பு: செவிலியர்கள் சங்கம்
X
செவிலியர்கள் சங்கம்
தஞ்சாவூரில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மாநில தலைவர் இந்திரா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநிலத் தலைவர் இந்திரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போது, அரசு செயலாளர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு ஆரம்ப சுகாதாரத்துறை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்தப் பலனும் இல்லை. மேலும், சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி திட்டத்தை, செவிலியர்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய கூறி வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு, உரிய தொகை வழங்கப்படவில்லை. மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு கூட கட்டணம் வழங்கப்படுவதில்லை. ஆனால், இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படவில்லை. அந்த நிதி முறையாக கொடுக்காமல், வேறு பணிகளுக்கு செலவு செய்கிறார்கள். முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மட்டுமல்ல, பல்வேறு ஆன்லைன் பதிவு செய்யும் வேலையை வழங்குவதால், பொதுசுகாதாரத் துறையில் சேவையாற்றி வரும் தடுப்பூசி போடும் எங்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அத்துடன் இதனால், தடுப்பூசி போடும் போன்ற மருத்துவ சேவை குறைபாடு நிகழும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் செவிலியர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் பல்வேறு செவிலியர்களின் குடும்பத்தில் தினம்தோறும் தகராறுகள் ஏற்படுகிறது.  இது குறித்து உயர் அலுவலர்களிடம் கேட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி வருகிறார்கள். தமிழகத்தில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி திட்டத்தை மீண்டும் சமூக நலத்துறையிடமோ அல்லது வருவாய்த்துறையிடமோ கொடுக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்ய தனியாக அலுவலரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 12 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்ல உள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார்.
Next Story