ஹெல்மெட் அணிந்த கொல்லையன்
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீஸ் ஸ்டேசன் எதிரே உள்ள கடைவீதியில் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் இந்த பகுதியில் உள்ள அந்த மளிகை கடையில், கடந்த 7.ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மேல் மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்து ஆள் நடமாட்டம் உள்ளதா என நோட்டமிடுகின்றனர். பின்னர், கடை வாசலில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்துவிட்டு இரும்பு கம்பியால் ஷட்டரின் பூட்டை உடைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் நீயூஸ் பேப்பர் போடுவதற்காக ஏஜன்ட் ஒருவர் மளிகை கடையின் ஷட்டர் உடைக்கப்படுவதை பார்த்து சத்தம் போட்டு உள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதே போல கடந்த வாரம் இந்த மளிகை கடைக்கு அருகில் இருந்த செல்போன் கடையில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது காவல் நிலையம் எதிரிலேயே அமைந்துள்ள கடை ஒன்றில் மீண்டும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாடாலூர் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். பெரம்பலூர் நகரம் மட்டுமின்றி புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளில் விதவிதமாக நடைபெறும் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களினால் பொதுமக்கள் ஏற்கனவே அச்சத்தில் உள்ள நிலையில் பாடாலூர் மளிகை கடையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்ட முயன்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது எச்சரிக்கை பதிவு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Next Story



