ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் அவலம்

ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் அவலம்
X
மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் மூட்டை எடுத்து சென்றதால் அதிருப்தி ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் அவலம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளில் இருந்து சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.இந்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அலுவலக கோப்பு, ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனு உள்ளிட்டவை வைக்கும் அறையை சுத்தம் செய்யும் பணியில், அலுவலக ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.இதற்காக, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மற்றொரு அறைக்கு, ஆவணங்கள் மற்றும் பழைய கோப்புகளை, மூட்டை மூட்டையாக மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலியை பயன்படுத்தி கொண்டு சென்றனர். அதிக பாரம் ஏற்றிகொண்டு செல்வதால், மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலி பழுதாகி, உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்க வரும் மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலி உபயோகிப்பதில் சிக்கல் ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில், அலுவலக ஆவணங்கள் மற்றும் பழைய பொருட்களை ஏற்றி சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story