நாமக்கல்: மயானத்திற்கு அருகே அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு பெற்றோர்கள்,பொதுமக்கள் எதிர்ப்பு
Namakkal King 24x7 |10 Feb 2025 6:44 PM ISTபுதிய வகுப்பறை பள்ளிகள் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளதாலும்,பள்ளிக்கு செல்லும் வழியில் மயான பகுதிகள் அமைந்துள்ளதால் மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
நாமக்கல் மாவட்டம் பொட்டணம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியை, ஆள் நடமாட்டம் இல்லாத ஊரின் ஒதுக்குப்புறத்தில் கட்டுவதை விடுத்து, மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளி அருகே உள்ள நிலத்தில் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலரும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.அப்போது நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்டணம் கிராமத்தில் 152 மாணவ- மாணவிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியை, புதிய கட்டிடத்தில் இயங்குவதற்காக ஏற்கனவே பள்ளி இருக்கும் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி, ஊரின் ஒதுக்குப்புறத்தில் கட்டப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளதை இரத்து செய்து, பழைய பள்ளியின் அருகிலேயே உள்ள காலி நிலத்தில் புதிய வகுப்பறைகளுடன் கூடிய பள்ளியை கட்ட வேண்டும் என பொட்டணம் கிராம பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், தற்போது புதிய வகுப்பறை பள்ளிகள் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளதாலும், அப்பள்ளிக்கு செல்லும் வழியில் மயான பகுதிகள் அமைந்துள்ளதால் மாணவ மாணவிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் என்றும், பெண் குழந்தைகளின் நலன் கருதி, பொட்டணம் ஊருக்குள் பழைய பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு அருகே புதிய பள்ளியை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.ஊர் பொது மக்களிடம் தெரிவிக்காமல், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி இந்த கட்டடம் கட்டுவது தொடர்பாக விளம்பரம் வெளியிடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பாரத மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
Next Story


