கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம்

24 மணி நேர உண்ணாவிரத போராட்டம்
நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்ட பொருளாளர் ப.அந்துவன்சேரல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மு.அன்பரசு போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். எம்எல்ஏ வி.பி.நாகை மாலி, மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா, முன்னாள் மாநில துணைத் தலைவர்கள் சு.சிவகுமார், கே.எம்.தியாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, அகவிலைப்படி ஆகியவைகளை விடுவிக்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்டோருக்கு ஊதிய குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்து, இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலமாக, சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
Next Story