சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்

X
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள். 18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம். மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள். ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரி, வீடு என்ற கதகதப்பான இந்த மதில் சுவருக்குள் இருக்கும் வாழ்க்கை ஒரு போதும் சமூகம் உங்களுக்கு வழங்காது. உங்களுக்கு விரும்பத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய குணநலன்கள் அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய குண நலன்களை நீங்கள் உருவாக்கிக் கொள்வதில், நீங்கள் ஏற்படுத்திக் கொள்வது அல்லது நீங்கள் மாற்றிக் கொள்வது என்பதை தாண்டி மற்றொருவர் இந்த குணங்களை மாற்றுவது என்ற நிலை வரும் போதும், அதை எதிர்கொள்ளும்போதும் சட்டப் பாதுகாப்புகள் என்ன இருக்கின்றன என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும். படிப்பு, அறிவு, திறமை, உழைப்பு இந்த நான்கும் தான் மனிதனின் உடைய வெற்றியை தீர்மானிக்கிறது. ஆனால், இந்நான்கும் இருக்கக்கூடிய எல்லோரும் முன்னேறவில்லை. வாழ்க்கையில் சிறப்பாக வெற்றியை அடைந்தவர்கள் அல்லது தாங்கள் விரும்பக்கூடிய ஒன்றை சரியாக பெற்று பொருளாதாரத்தில், சமூகத்தில் நல்ல வலிமையோடு இருக்கக்கூடிய எல்லோருக்கும் முக்கியமான ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய விழிப்புணர்வும், அந்த விழிப்புணர்வை பெற்ற பிறகு அவர்கள் தேடிய தேடல்கள் தான். எனவே, படிப்பு, அறிவு, திறமை, உழைப்பு இந்த நான்கும் முக்கியமானது தான். ஆனால் இது எல்லாவற்றையும் விட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மிகவும் முக்கியம். நீங்கள் எவ்வளவு விரிவாகவோ, ஆழமாகவோ தேடுகிறீர்களோ நீங்கள் அவ்வளவு மிக மதிப்பு மிக்க வைரங்களை வாழ்க்கையில் பெறுவீர்கள். இன்றைக்கு மாறி வரக்கூடிய உலகில் கற்றல், கற்பித்தல், புதியனவற்றை தெரிந்து கொள்ளுவதற்கான சூழல் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது. இன்று தனது தொடர் வளர்ச்சிக்கு தேவையான கற்றலை உலகம் முழுவதும் இணைய வழியில் பெற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கும் போது, நமக்கான இடம் எங்கு இருக்கிறது. சட்ட பாதுகாப்பு எங்கு இருக்கிறது, நமக்கான சமூக பாதுகாப்பு எது, சமூக பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது, தனி மனித பிரச்சினைகள் அணுகுவது என்பதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியம். எனவே, நீங்கள் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உங்களது தனிப்பட்ட வாழ்வில், சமூக வாழ்வில் உங்களுடைய குடும்ப வாழ்வில், தொழில் வாழ்வில் இவற்றிற்கு எல்லாம் தனக்கு தேவையான தகவமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, நாம் ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை தகவமைத்து கொள்வதற்கான புரிதல்கள் நமக்கு வேண்டும். அதற்கான அறிவை வாசிப்பதன் மூலமாக, கேட்பதன் மூலமாக, இந்த சமூகத்தினை புரிந்து கொள்;வதன் மூலமாக கிடைக்கும். அறிவு என்பது நம்மை துன்பத்தில் இருந்து காக்கும். சமூக வாழ்விற்கும், தனி மனித வாழ்விற்கும், பொருளாதார விடுதலைக்கும் நீங்கள் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். இதனை எதிர்கொள்ள உங்களுக்கு கல்வியின் கேள்வியின் மூலமாக வரக்கூடிய அறிவு மற்றும் மற்றவர்களின் அனுபவங்களின் மூலம் நாம் அறிவை பெற்றுக்கொள்வது. எனவே, அடுத்தவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அதிகமான வாய்ப்புக்களை பெற்று விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நீங்கள் விழிப்புணர்வை பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வாய்ப்புகளை பெற்று தனிமனித வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் மிக பெரிய நிலையை நீங்கள் அடைய வேண்டும். நீங்கள் அடைவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கு எடுத்துக்கூறுவதற்கான சிந்தனையும், அறிவையும் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

