நாய்கள் கடித்து ஆடுகள் இறக்கும் சம்பவம் தொடர்கிறது
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியை சேர்ந்தவர் கலியப்பெருமாள். விவசாயி. இவர் நேற்று வயலில் தனது ஆடுகளை மேய விட்டு விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். மாலை வயலுக்கு சென்று ஆடுகளை பார்த்தபோது, உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு 5 ஆடுகள் செத்து கிடந்தன. அப்பகுதியில் உள்ள நாய்கள், ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. சீயாத்தமங்கை - திருமருகல் மெயின் ரோடு பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் அங்கு சாலையோரம் கொட்டப்படும் கோழி ,ஆட்டு இறைச்சி கழிவுகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. சில சமயங்களில் அசைவ உணவு கிடைக்காத நேரத்தில், அந்த நாய்கள் இதுபோன்று வயலில் மேயும் ஆடுகளை கடித்து குதறி செல்கின்றன. இது போன்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று, கடந்த 8- ம் தேதி திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் 8 ஆடுகள் நாய்கள் கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story



