சிவன்மலை கோவில் தைப்பூச தேரோட்டம் வெகு விமர்சையாக துவங்கியது - அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட நிகழ்வு துவங்கியது. இதில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ், அயலகத் தமிழர் நல வாரியம் கார்த்திகேய சேனாபதி முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட முதல் நாள் நிகழ்வு இன்று மாலை துவங்கியது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிரிஸ்துராஜ், அயலகத் தமிழர் நல வாரியம் மற்றும் மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். தை மாத 20ஆம் தேதி பிப்ரவரி 02ஆம் தேதி துவங்கிய தைப்பூசத் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேர் நிகழ்வை துவங்கினர். மேலும் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை. இங்கு பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கொங்கு மண்டலத்தில் உள்ள மலைக்கோயிலில் சிவன்மலை மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும், சிவவாக்கிய சித்தர் பாடல் பெற்ற தளமாகவும், விநாயகப் பெருமான் முருகப்பெருமானை வணங்கும் தளமாகவும் விளங்குகிறது. நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்கு உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்ரமணிய சாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை குறிப்பிட்டு கூறி அதை கோவில் முன் உள்ள மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி (பேழைக்குள்) பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சாமியிடம் பூ கேட்பார்கள். பூ கொடுத்தால் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தர்களின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருளே வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். "கந்தன் பாதம் கனவிலும் காக்கும் " என்ற ஸ்லோக மந்திரத்தை தாரக மந்திரமாக கொண்ட கோவில் ஆகும் ஆஞ்சநேயர் என்றாலே ராமபக்தராத்தான் இருக்கும் என நாம் நினைப்போம் ஆனால் சிவன்மலை கிரிவலப்பாதையில் சிவன்மலை பார்த்தவாறு சிவனுக்கு பூஜை செய்யும் சிவபக்தர் வடிவில் ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர் கோவில் என்றால் குங்குமம் தான் பிரசாதமாக வழங்கப்படும் ஆனால் இங்கு பிரசாதமாக விபூதியே வழங்கப்படுகிறது . நோய் தீர்க்கும் மருந்தாக ஆஞ்சிநேயருக்கு சாத்தப்படும் வெண்ணை பக்தர்களுக்கு வழங்கப்படுவது இக்கோவிலின் மற்றும் ஒரு சிறப்பாகும் . சிவன்மலை கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த, 2ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் தேர் திருவிழா நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் மகா அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகர புஷ்ப நல்லோரையில் முக்கிய நிகழ்வாக சுவாமி ரதத்திற்கு எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணியளவில் தேரோட்டத்தின் முதல் நாள் நிகழ்வு நடைபெற்றது. இத்தேரோட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிரிஸ்துராஜ், அயலக தமிழர் நலவாரியம் மற்றும் மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர், ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். மேலும் திருத்தேரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இழுத்து சென்றனர். தேர் இன்று , நாளை மற்றும் நாளை மறுநாள் என தொடர்ந்து 3 நாட்கள் சிவன்மலையின் கிரிவலப் பாதையில் சுற்றி வந்து நிலையை அடையும். தேரோட்டத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். திருத்தேரானது இன்றும், நாளை 12,13 தேதிகளில் மலையை வலம் வந்து நிலை அடைகிறது. வருகிற 16ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டையும், 17ம் தேதி 10:00 மணிக்கு மஹாதரிசனமும், 20ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. மேலும் சிவன்மலை தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஊரை சுற்றிலும் தேர்க் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்த் திருவிழாவில் சுவாமியை தரிசித்த பக்தர்கள் அனைவரும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் இவ்விழாவிற்கு பாதுகாப்பு பணியில் காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் , காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் , ஆகியோர் தலைமையில் 450க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவ்விழாவிற்கு காங்கயம் வட்டாச்சியர் மோகனன், காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர் வேந்தன் , சிவன்மலை ஊராட்சி பொதுமக்கள் குருக்கத்தி,நீலகாட்டுப்புதூர்,காட்டூர்,பள்ளக்காடு சண்ணை மிராசுதாரர்கள் என சுமார் 30000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story





