குப்பைகள் தரம் பிரிப்பதில் முறைகேடு புகார்: முன்னாள் ஆணையரிடம் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் விசாரணை

குப்பைகள் தரம் பிரிப்பதில் முறைகேடு புகார்: முன்னாள் ஆணையரிடம் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் விசாரணை
X
விசாரணை
தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பைகள் தரம் பிரிப்பது தொடர்பான திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுப்பப்பட்ட புகார் குறித்து முன்னாள் ஆணையர் க. சரவணகுமாரிடம் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர். தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் மாநகரில் நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறத்தாழ 110 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், இக்கிடங்கில் குப்பைகள் மலை போல குவிந்து வருவதால், பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள், தீ விபத்துகள் உள்ளிட்ட பிரச்னைகளால் சுற்றியுள்ள மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக இக்குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படாமல், ரூ. 10 கோடிக்கும் அதிகமாக முறைகேடு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த காலத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய பு. ஜானகி ரவீந்திரன், க. சரவணகுமாரிடம் விசாரணை நடத்த தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் முடிவு செய்தனர். இதன்படி, இருவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஊழல் தடுப்பு காவல் பிரிவு அலுவலர்கள் அழைத்தனர். இதன் பேரில், தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் முன்னிலையில் சரவணகுமார் திங்கள்கிழமை ஆஜரானார். இவரிடம் காவல் பிரிவினர் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தினர். இது குறித்து ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் கூறுகையில், இதேபோல, ஜானகி ரவீந்திரன் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் ஆஜராக வாய்ப்புள்ளது. இந்த விசாரணை முடிவடைந்த பிறகு அறிக்கை தயார் செய்யப்படும். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றனர்.
Next Story