காஞ்சிபுரத்தில் முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை
சின்ன காஞ்சிபுரம் கே.எம்.வி., நகர், வி.என்.பெருமாள் தெருவில், அருட்பெருஞ்ஜோதி ஜீவா அழகரசன் இல்லத்தில், 23வது ஆண்டு தைப்பூச அன்னதான பூஜை, நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. மதியம் 12:15 மணிக்கு பக்தர்களுக்கு அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் நெமந்தகார தெருவில் உள்ள பழநி ஆண்டவர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். செவிலிமேடு காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வந்தார். காஞ்சிபுரம் சி.என்.அண்ணாதுரை தெருவில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என அழைக்கப்படும் சத்திய ஞான சபையில், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றமும் நடந்தது. இரவு 7:15 மணிக்கு ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. இதில், சின்ன காஞ்சிபுரம் மற்றும் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, முலவர் மலர் அலங்காரத்திலும், பழ வகைகளில் அலகரிக்கப்பட்ட சஷ்டி மண்டபத்தில், உற்வசர் ரத்தி அங்கி சேவை மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை 4:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும், நடைபயணமாக வந்தும், பக்தர்கள் வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், கோவில் மலை குன்றில் இருந்து அடிவாரம் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story



