வேங்கைவயல் விவகாரம், சிபிஐ விசாரணை தேவை - தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கோரிக்கை 

வேங்கைவயல் விவகாரம், சிபிஐ விசாரணை தேவை - தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கோரிக்கை 
X
கோரிக்கை
வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனித மலத்தைக் கலந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநில தலைவர் அரங்ககுணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது . வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையில் அதிருப்தியுற்ற மக்கள் இயக்கங்கள் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். தொடக்கத்தில் சிபிஐ விசாரணை கோரிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இப்போது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தைக் கோருவது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பிரச்சினையை காலம் தாழ்த்தி கிடப்பில் போடுவதற்கான காரணம் என்பதை கடந்த பல ஆண்டுகால விசாரணை ஆணையங்களின் அனுபவம் எடுத்துக் காட்டாகும்.   அரசின் விருப்பத்துக்கு ஏற்ற முடிவுகளை தீர்மானிக்கும் அல்லது பரிந்துரைக்கும் நீதிபதிகளையே ஆணையத்தின் தலைவராக நியமிப்பது வழக்கமான ஒன்று . மேலும் ஒரு நபர் ஆணையம் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ, குற்றவழக்குத் தொடுக்கவோ அதிகாரம் அற்றது. ஆணையத்தின் பரிந்துரையை ஏற்கவும், மறுக்கவும் கிடப்பில் போடவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. கீழ் வெண்மணியில்44 பேர் எரித்துக் கொள்ளப்பட்டதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கணபதியாபிள்ளை கமிசன் முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி அருணாசெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் என இதுவரை 46 விசாரணை ஆணையங்கள் நியமிக்கப்பட்டு, எந்த விசாரணை ஆணையமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவில்லை. எனவே வேங்கைவயல் விவகாரத்தில் தனிநபர் ஆணையம் என்பது கண்துடைப்பு.சிபிசிஐடி அறிக்கையை ஒட்டியே விசாரணை ஆணையத்தின் திசையும் பயணிக்கும் என்ற அச்சம் அனைத்து மக்கள் இயக்கங்களிடம் உள்ளதால்  தமிழக அரசு கௌரவம் பார்க்காமல் வேங்கைவயல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் நீதி என குறிப்பிட்டுள்ளார் .
Next Story